விலைவாசி ஏற்றத்துக்கு மத்திய அரசே காரணம்: சட்டசபையில் ஜெயலலிதா தகவல் central government cause rate price jayalalitha infirm assembly
சென்னை, அக். 30–
சட்டசபையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ராமச்சந்திரன் விலைவாசி குறித்து பேசியதற்கு பதில் அளித்து முதல்– அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:–
விலைவாசி ஏற்றத்திற்கு காரணம் மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள். ஆனால் விலைவாசி ஏற்றத்தை சமாளிக்க மாநில அரசு தன்னால் முடிந்த அளவு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
பிற மாநில அரசுகளைப் பற்றி நான் பேச வரவில்லை. தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரையில், மத்திய அரசினால் ஏற்பட்ட வெங்காய விலை ஏற்றத்தினை சமாளிக்க மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு 60 ரூபாய். சாம்பார் வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 75 முதல் 80 ரூபாய் விலையில் விற்கப்படுகிறது. பழமுதிர் நிலையங்கள் போன்ற நவீன மயமாக்கப்பட்ட கடைகளில் பெரிய வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 70 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது. சாம்பார் வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 95 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.
ஆனால் தமிழ்நாடு அரசின் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தற்போது சென்னையில் 30 கடைகள் இயங்கி வருகின்றன. தரமான பெரிய வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய் என்ற விலைக்கு விற்கப்படுகிறது. சாம்பார் வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 60 ரூபாய் என்ற விலைக்கு விற்கப்படுகிறது.
ஆக, இந்த அரசைப் பொறுத்த வரையில், மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுமையை குறைப்பதற்கு தன்னால் இயன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிற மாநிலங்களில் பெரிய வெங்காயத்தின் விலை என்னவென்றால் பெங்களூரில் 58 ரூபாய், ஐதராபாத்தில் 60 ரூபாய், கேரளாவில் 70 ரூபாய், டெல்லியில் 65 ரூபாய், மும்பையில் 70 ரூபாய், கொல்கத்தாவில் 70 ரூபாய், பீகாரில் 80 ரூபாய், அசாமில் 78 ரூபாய்.
தமிழ்நாட்டிற்கு பெரிய வெங்காயம் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாசிக், லாசல்கான், அகமது நகர், பிம்பல்கான் மற்றும் ஷோலாப்பூர் ஆகிய பகுதிகளிலிருந்தும், கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன், ஹுப்ளி, தேவகரே மற்றும் பெங்களூரில் இருந்தும், ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்நூல், ஆதோனி ஆகிய பகுதிகளிலிருந்து வரவழைக்கப்படுகிறது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்நூலில் போராட்டம் நடைபெறுவதால், அங்கிருந்து வெங்காயம் கொண்டு வர இயலாத நிலை உள்ளது. கோயம்பேட்டிற்கு நாளொன்றிற்கு சுமாராக 70 லாரிகளில் வெங்காயம் வந்து கொண்டிருந்தது.
24.10.2013 அன்று 55 லாரிகளும், 25.10.2013 மற்றும் 26.10.2013 ஆகிய தேதிகளில் 50 லாரிகள் மட்டுமே வந்துள்ளன. இருப்பினும், தமிழகத்தில் வெங்காயத்தின் விலை மற்ற மாநிலங்களில் உள்ள வெங்காயத்தின் விலை ஒத்ததாகவே உள்ளது.
நுகர்வோருக்கு நியாயமான விலையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்யும் நடவடிக்கையாக, சென்னை பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தற்போது நாளொன்றுக்கு 6 டன் பெரிய வெங்காயமும், 1 டன் சாம்பார் வெங்காயமும் விற்பனை செய்யப்படுகிறது. 26.10.2013 முதல் எனது உத்தரவின்படி, பெரிய வெங்காயம் மற்றும் சாம்பார் வெங்காயம் கொள்முதல் இரட்டிப்பாக்கப்பட்டு உள்ளது.
காய்கறிகளின் விலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, உடனடியாக கூடுதலாக 10 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளைத் துவக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அம்மா உணவகம் பற்றி எல்லோருக்கும் தெரியும். சாதாரணமாக ஓட்டல்களில் இட்லி சாம்பார் சாப்பிடுவது என்றால் என்ன விலை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அம்மா உணவகங்களில் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.
சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. தயிர் சாதம் 3 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இப்படி அதிகமான அம்மா உணவகங்களை எங்கெல்லாம் துவங்க முடியுமோ துவங்கி மக்களுடைய சுமையை குறைப்பதற்கு இந்த அரசு மேலும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சாதாரணமாக ஒரு பாட்டில் மினரல் வாட்டரை வாங்கிக் குடிக்க வேண்டுமென்றால் 20 ரூபாய் ஆகும். 20 ரூபாய்க்கு குறைந்து வெளிச்சந்தையில் கிடைக்காது. ஆனால், போக்குவரத்துத்து துறை மூலமாக அதே தரமான குடிநீரை, மினரல் வாட்டரை 10 ரூபாய்க்கு வழங்கிக் கொண்டிருக்கிறோம். இப்படி மாநில அரசின் சக்திக்கு உட்பட்டு மாநில அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டு என்னனென்ன நடவடிக்கைகளை, விலைவாசியை குறைக்க என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க முடியுமோ எடுத்து வருகிறோம்.
அதே சமயத்தில், மத்திய அரசு பொறுப்புடன் நடந்து கொள்ளவில்லை. நிதிநிலையைப் பற்றி மத்திய அரசிடமிருந்து மாநில அரசுக்கு வரவேண்டிய நிதிகளைப் பற்றி எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இங்கே குறிப்பிட்டார்.
மத்திய அரசுக்கு ஒரு நம்பகத்தன்மை இருக்க வேண்டும். ஒரு ஆண்டுக்கான பட்ஜெட்டை வெளியிட்டு, நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்து, நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பிறகு, ஒவ்வொரு மாநிலத்திற்கு இவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்று அதில் ஒரு திட்டம் போட்ட பிறகு அதை மாற்றக்கூடாது.
ஏனென்றால், வெவ்வேறு இனங்களில் மத்திய அரசிடமிருந்து மாநில அரசுக்கு வரவேண்டிய நிதி உள்ளது. அப்போது அந்தத் திட்டத்தின்கீழ் என்னென்ன பணிகளை இங்கு மேற்கொள்ளலாம் என்று மாநில அரசும் திட்டம் தீட்டுகிறது. மத்திய அரசு குறிப்பிட்ட ஒரு திட்டத்தின்கீழ் இத்தனை கோடி ரூபாய் மாநில அரசுக்கு ஒதுக்கப்படும் என்று அவர்களுடைய மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவித்த பின்னர் மாநில அரசு அதற்கேற்ப தனது திட்டங்களை வகுத்து செயல்பட ஆரம்பிக்கிறது.
ஒவ்வொரு திட்டத்தின் கீழும் சில பணிகளை மேற்கொண்டு செலவும் செய்து விடுகிறது. பல கோடி ரூபாய்களை எந்த நம்பிக்கையில் செலவு செய்கிறோம். பின்னர் மத்திய அரசு இந்தப் பணத்தை நமக்கு அளிக்கும், நமக்கு வரவேண்டிய நிதி மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் செலவு செய்கிறோம். ஆனால், அண்மையில், துரதிர்ஷ்டவசமாக, இதுவரை வரலாற்றில் இல்லாததாக, ஒரு முன்மாதிரி இல்லாத வகையில் மத்திய அரசு தன்னுடைய நம்பகத்தன்மையையே கெடுத்துக் கொண்டுள்ளது.
அதாவது, ஏற்கெனவே, பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஒவ்வொரு திட்டத்தின் கீழ் இத்தனை கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று தெரிவித்த பிறகு அதில் நாங்கள் அதை நம்பி செலவு செய்ய ஆரம்பித்த பிறகு, 20 சதவீதம் அளவு வரை வெட்டு செய்திருக்கிறார்கள். 20 சதவீதம் குறைத்து இருக்கிறார்கள். அப்படியானால், குறிப்பிட்டு மத்திய அரசிடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்கெனவே மாநில அரசு பல பணிகளை துவங்கிவிட்டதே, பல கோடி ரூபாய்களை செலவு செய்து விட்டதே, அவையெல்லாம் எங்கிருந்து வரும், அந்தப் பணத்தை யார் மீண்டும் ஈடுசெய்வார்கள்.
ஆகவே, இப்படி பல பிரச்சனைகளுடன் போராடிக் கொண்டு அதே நேரத்தில் மத்திய அரசு எடுக்கின்ற தவறான நடவடிக்கைகள் காரணமாக, மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக, சாமான்ய மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள், துன்பப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து இந்த அரசு, தமிழக அரசு, தன்னால் இயன்ற அளவு மக்களின் துன்பங்களை குறைத்து, விலைவாசியை குறைக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இப்போது மாநில அரசுக்கு என்று இருக்கின்ற ஒரே வருவாய் வணிக வரிமூலமாக வருகின்ற வருவாய்தான். வேறு எந்த வருமானமும் கிடையாது. அதிலேயும் கை வைக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது.
அதற்காகத்தான், இந்த நல்லெண்ண சேவை வரி மசோதாவை அவர்கள் கொண்டு வருகிறார்கள். அதற்காகத்தான் அதை கடுமையாக எதிர்த்திருக்கிறோம். சாதாரண எதிர்ப்பல்ல, ஒரு முறையல்ல, இரு முறையல்ல, 2011 முதல் இந்த மசோதாவை பற்றி அவர்கள் குறிப்பிடும் போதெல்லாம், கொண்டு வரவேண்டும் என்று சொல்லும் போதெல்லாம், மாநில அரசு, இந்த அரசு, எனது தலைமையிலான அரசு தொடர்ந்து எதிர்த்துக் கொண்டே வந்திருக்கிறது. அண்மையிலும், மாநில நிதி அமைச்சர்களின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில் நம்முடைய மாநிலத்தின் சார்பில் வணிக வரி அமைச்சர் அங்கே கலந்து கொண்டார். முழுவதுமாக எதிர்த்து இருக்கிறோம்.
அதாவது, ஒரு ஷரத்து, இரண்டு ஷரத்து என்றல்ல. ஒரு பிரிவு, இரண்டு பிரிவு என்றல்ல. ஒட்டுமொத்தமாக அந்த சட்டத்தையே எதிர்த்து இருக்கிறோம். அதையும் மீறி, அவர்கள் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தால், பாதிப்பு அதிக நாட்கள் வரை இருக்காது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன், மத்தியிலே அரசு மாறும், ஆட்சி மாறும், எல்லாமே மாறும், அப்போது இந்தச் சட்டத்தையே தூக்கி எறிவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
...
shared via