Wednesday, October 23, 2013

610 புதிய பஸ்கள்–50 சிறிய பஸ்கள் ஜெயலலிதா தொடங்கி வைத்தார் 610 new bus 50 small bus jayalalitha inaugurated

610 புதிய பஸ்கள்–50 சிறிய பஸ்கள் ஜெயலலிதா தொடங்கி வைத்தார் 610 new bus 50 small bus jayalalitha inaugurated

சென்னை, அக். 23–

தமிழ்நாடு முழுவதும் 610 புதிய பஸ்கள், சென்னை நகரில் 50 சிறிய பஸ்கள் மற்றும் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 61,746 பேருக்கு ரூ.257 கோடி பணப்பயன் வழங்கும் விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று காலை நடந்தது.

முதல் – அமைச்சர் ஜெயலலிதா புதிய பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணப்பயன்களையும் வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:–

மனித வாழ்வின் முன்னேற்றத்திற்கும், பொருளாதார மேம்பாட்டிற்கும், இன்றியமையாததாக விளங்குவது போக்குவரத்து வாகனங்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இதில் சாலைப் போக்குவரத்து முக்கியப் பங்கு வகிக்கிறது.

சாலைப் போக்குவரத்துச் சேவையை குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு வழங்கும் பணியை அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மேற்கொண்டு வருகின்றன.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சேவையை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிதாக 610 பேருந்துகள் மற்றும் சென்னை மாநகர மக்களின் தேவையை நிறைவு செய்யும் வகையில் 50 புதிய சிற்றுந்துகள், அதாவது ''ஸ்மால் பஸ்'' ஆகியவற்றை இன்று துவக்கி வைப்பதிலும், 257 கோடி ரூபாய் மதிப்பிலான ஓய்வூதியப் பயன்களை ஓய்வு பெற்ற போக்குவரத்துத் துறை தொழிலாளர்களுக்கு வழங்குவதிலும், நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நான் மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் நிலைமை அதல பாதாளத்தில் இருந்தது.

2011 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் ஒட்டுமொத்த இழப்பு 6,150 கோடியே 95 லட்சம் ரூபாய் ஆகும்.

முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின் நிதி நிர்வாக சீர்கேட்டினால் பணியிலிருந்து ஓய்வு பெற்ற போக்குவரத்துத் துறை தொழிலாளர்களுக்கான ஓய்வூதியப் பயன்கள் நிலுவையில் வைக்கப்பட்டிருந்தன.

போக்குவரத்துத் துறை தொழிலாளர்களுக்கு சம்பளம் கூட அளிக்க முடியாத நிலைமை இருந்தது. பல பேருந்துகள் இயக்க இயலாத நிலையில் இருந்தன. மொத்தத்தில், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் முடங்கிப் போகும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன.

இவை அனைத்திற்கும் முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையே முக்கிய காரணம்.

நான் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு போக்குவரத்துக் கழகங்களை திறம்பட செயல்படுத்திட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் போக்குவரத்துக் கழகங்களுக்கு நிதி உதவி அளித்தல், புதிய பேருந்துகளை வாங்குதல், பழைய பேருந்துகளை புதுப்பித்தல், போன்ற பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்தேன். தகுதியற்ற பேருந்துகளுக்கு மாற்றாக புதிதாக 1,026 கோடி ரூபாய் செலவில் 6000 புதிய பேருந்துகள் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் 3,051 பேருந்துகள் வாங்கப்பட்டு தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இது மட்டுமல்லாமல், அடிச்சட்டம் மற்றும் எஞ்சின் நல்ல நிலையில் உள்ள 483 பேருந்துகள் 34 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் போக்குவரத்துக் கழகங்களில் இயக்கப்படும் பேருந்துகளின் பராமரிப்பிற்காக புதிதாக 68 பணிமனைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொலைதூர தடங்களுக்கு மின்னணுப் பயணச் சீட்டு முன்பதிவு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

16,661 ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் தொழில் நுட்பப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. பணியில் இருக்கும் போது இறந்து போன பணியாளர்களின் 346 வாரிசுகள் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

9,157 பதிலி பணியாளர்களின் பணி வரன்முறை செய்யப்பட்டுள்ளது. 45 வயதிற்கு மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. பண்டிகை காலங்களில் பொதுமக்களின் நலன் கருதி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வருமானத்தைப் பெருக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பேருந்துகளில் விளம்பரம் செய்வதன் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 28 கோடியே 13 லட்சம் ரூபாய் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.

இதே போன்று அஞ்சல் சேவைகளை அறிமுகப்படுத்தியதன் விளைவாக கடந்த இரண்டு ஆண்டுகளில் 44 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இது தவிர பயண வழி உணவகங்கள் மூலமாக 4 கோடியே 67 லட்சம் ரூபாய் வருமானத்தை அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ஈட்டியுள்ளன.

அதே சமயத்தில் டீசல் விலையை மத்திய அரசு அடிக்கடி உயர்த்திக் கொண்டே செல்வதன் காரணமாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதிச் சுமையை மக்கள் மீது சுமத்தாமல் இருக்கும் வகையில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு கடந்த ஆண்டு 200 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. நடப்பாண்டிலும் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக செப்டம்பர் 2010 முதல் மார்ச் 2011 வரை ஓய்வு பெற்ற, 2,316 தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகையாக 47 கோடியே 71 லட்சம் ரூபாயும் ஏப்ரல் 2011 முதல் செப்டம்பர் 2011 வரையிலான காலத்தில் ஓய்வு பெற்ற 2,337 தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகையாக 52 கோடியே 48 லட்சம் ரூபாயும் என மொத்தம் 4,653 ஓய்வூதியதாரர்களுக்கு 100 கோடியே 19 லட்சம் ரூபாய்க்கான ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வழங்காமல் விட்டுச் சென்ற 30 கோடியே 33 லட்சம் ரூபாய் பணிக்கொடை மற்றும் 14 கோடியே 45 லட்சம் ரூபாய் விடுப்பு ஒப்படைப்பு தொகை என மொத்தம் 44 கோடியே 78 லட்சம் ரூபாயையும் சேர்த்து இதுவரை, 153 கோடியே 47 லட்சம் ரூபாய் பணிக்கொடை 32 கோடியே 38 லட்சம் ரூபாய் விடுப்பு ஒப்படைப்பு தொகை என மொத்தம் 185 கோடியே 85 லட்சம் ரூபாய் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக இன்று 2011 அக்டோபர் முதல் 2013 செப்டம்பர் வரை ஓய்வு பெற்ற 9,189 தொழிலாளர்களுக்கு 187 கோடியே 23 லட்சம் ரூபாய் ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை, 47,649 ஓய்வூதியதாரர்களுக்கு 45 கோடியே 77 லட்சம் ரூபாய் அகவிலைப்படி, 4,908 ஓய்வூதியதாரர்களுக்கு 24 கோடி ரூபாய் ஓய்வூதியத் தொகை என மொத்தம், 257 கோடி ரூபாய் ஓய்வூதியதாரர்களுக்கு இன்று வழங்கப்பட இருக்கிறது. இவர்களில் 25 பேர்களுக்கு இந்த மேடையில் நான் வழங்க உள்ளேன். மற்றவர்களுக்கு அமைச்சர் பெருமக்கள் இன்றே வழங்குவார்கள்.

இதே போன்று பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு 610 புதிய பேருந்துகள் மற்றும் சென்னை மாநகர மக்களின் தேவையை நிறைவு செய்யும் வகையில் போக்குவரத்து இணைப்பில்லா பகுதிகளிலிருந்து அருகிலுள்ள பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் 50 சிற்றுந்துகள் ஆகியவற்றை நான் இங்கே துவக்கி வைக்க உள்ளேன்.

மக்கள் சேவையை மேலும் மேம்படுத்திடும் வகையிலும், ""செய்யும் தொழிலே தெய்வம்" என்பதற்கேற்ப உழைத்து ஓய்வு பெற்ற உங்கள் வாழ்வினை உயர்த்திடும் வகையிலும், இந்த விழா அமைந்துள்ளது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இவ்வாறு முதல்– அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.

...

shared via

No comments:

Post a Comment

Popular Posts