Friday, October 25, 2013

இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறும்: ஜெயலலிதா அறிவிப்பு Jayalalitha announced tamilnadu end of the year in excess of the State and becomes

இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறும்: ஜெயலலிதா அறிவிப்பு Jayalalitha announced tamilnadu end of the year in excess of the State and becomes

சென்னை, அக். 25–

சட்டசபையில் இன்று பாலபாரதி (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு), ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்டு) ஆகியோர் சிறு, குறு தொழில்களுக்கும், விவ சாயிகளுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்க கோரும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார்கள்.

இதற்கு பதிலளித்து முதல்– அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:–

தற்போது பேசிய உறுப்பினர்கள் பாலபாரதி, ஆறுமுகம் ஆகியோர் தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டு நிலைமை பற்றி இங்கே குறிப்பிட்டார்கள். இதனால், சிறு, குறு தொழில்கள் நடத்துபவர்கள் பாதிக்கப்படுவதாக தற்போது குறிப்பிட்டார்கள். இன்றைய நிலைமையில் மின்வெட்டு குறித்து கவலைப்படக்கூடிய எந்தச் சூழ்நிலையும் இல்லை என்பதை ஆரம்பத்திலேயே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இயற்கை நமக்கு பல சக்திகளை வாரி வழங்கி இருந்தாலும், அவற்றில் மிகப் பெரிய அளவில் மக்களுக்கு பயன்படுவதாகவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாததாகவும் விளங்குவது மின் சக்தி என்று சொன்னால் அது மிகையாகாது. கண்ணால் பார்க்க முடியாத மின்சாரத்தை அதன் செயல்பாடுகளில் இருந்து உணருவது போல், மின் உற்பத்தியைப் பெருக்க, தமிழகத்தை மின் மிகை மாநிலமாக்க நான் எடுத்து வரும் துரித நடவடிக்கைகளை கண்ணால் காண முடியாவிட்டாலும், தற்போதைய சீரான மின் விநியோகத்தின் மூலம் தமிழக மக்கள் எளிதில் உணர்ந்து இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின் அக்கறையின்மை, தொலைநோக்கற்ற பார்வை, நிர்வாகத் திறமையின்மை காரணமாக, ஒளிமயமாக இருந்த தமிழகம் இருளில் மூழ்கியது.

நான் 2011 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது, தமிழகத்தின் மின் பற்றாக்குறை 4,000 மெகாவாட் அளவுக்கு இருந்தது. இதற்குக் காரணம், ஆண்டுக்காண்டு உயர்ந்து கொண்டே வரும் மின் தேவைக்கு ஏற்ப புதிய மின் திட்டங்களை உரிய காலத்தில் தீட்டாதது, ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்ட திட்டங்களை சரிவர நிறைவேற்றாதது, மின் விநியோக கட்டமைப்புகளை மேம்படுத்தாதது, நீண்டகால அடிப்படையில் பிற மாநிலங்களிலிருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்யாதது என பல குற்றச்சாட்டுக்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

1991 முதல் 1996 வரை நான் முதலமைச்சராக இருந்த போது, 1,302 மெகாவாட் மின் நிறுவு திறன் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், 1996 முதல் 2001 வரையிலான தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வெறும் 561 மெகாவாட் மின் நிறுவு திறன் மட்டுமே ஏற்படுத்தப்பட்டது.

பின்னர், 2001 முதல் 2006 வரை நான் இரண்டாவது முறையாக முதலமைச்சராக இருந்த போது, 2,518 மெகாவாட் மின் நிறுவு திறன் ஏற்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அனல் மின் நிலையங்களின் சிறப்பான செயல்பாட்டிற்காக மத்திய அரசின் விருதுகள் நமக்கு கிடைத்தன. காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முன்னிலை மாநிலங்களில் ஒன்றாக விளங்கியது. மொத்தத்தில் தமிழகம் மின் மிகை மாநிலமாக விளங்கியது. ஆனால், 2006 முதல் 2011 வரையிலான முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் வெறும் 206 மெகாவாட் அளவுக்கே கூடுதல் மின் நிறுவு திறன் ஏற்படுத்தப்பட்டது.

2001 முதல் 2006 வரையிலான எனது ஆட்சிக் காலத்தில் கூடுதல் மின் நிறுவு திறன் ஏற்படுத்தப்பட்டதன் காரணமாக, தமிழ்நாட்டில் மின் தேவை அதிகரித்த போதும், மைனாரிட்டி தி.மு.க. அரசு பொறுப்பேற்று ஓராண்டு வரை மின் பற்றாக்குறை இல்லாத நிலைமை நிலவியது. இந்தியாவிலேயே மின்சார உற்பத்தியில் உபரி மாநிலமாக இருப்பது தமிழ்நாடு மட்டும் தான் என்று அப்போதைய மின்சார துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியே 3.4.2007 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பேசி இருப்பதை இந்தத் தருணத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த நிலைமை சிறிது காலம் தான் நீடித்தது. 2007 ஆம் ஆண்டு இறுதியிலிருந்தே நிலைமை தலைகீழாக மாற ஆரம்பித்து, 2008 ஆம் ஆண்டிலிருந்து மின் பற்றாக்குறை தமிழகம் முழுவதும் தலைவிரித்து ஆட ஆரம்பித்தது.

இந்த அளவுக்கு நிலைமை மோசமானதற்கு அனல் மின் நிலையங்கள் சரியாக பராமரிக்கப்படாதது, மின் உற்பத்தித் திட்டங்களை விரைவுபடுத்தாதது, மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்குரிய மின்சாரத்தை பெற முடியாதது என பல்வேறு காரணங்கள் உள்ளன. இருப்பினும், நீண்ட கால அடிப்படையில், அதாவது கேஸ்–1 என்கிற அடிப்படையில் மின்சாரத்தை கொள்முதல் செய்திருந்தாலே இந்த மின் பற்றாக்குறையை சமாளித்து இருக்கலாம். இதை முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு செய்திருந்தால், நமக்கு குறைந்த விலையில் மின்சாரம் கிடைத்திருக்கும். ஆனால், இதை முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு செய்யவில்லை.

மாறாக, அதிக விலை கொடுத்து குறுகிய கால அடிப்படையில் மின்சாரம் வாங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்தது. இந்தச் சூழ்நிலையில், மின்சாரத்தைக் கொண்டு செல்லும் வழித் தடத்தில் நெருக்கடி ஏற்பட்டதால், நீண்டகால அடிப்படையில் கொள்முதல் ஒப்பந்தங்களை செய்து கொண்ட மாநிலங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதன் விளைவாக, விலை கொடுத்தாலும் மின்சாரத்தை கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

நான் மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், தமிழகத்தின் மின் பற்றாக்குறையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தேன். மின் பற்றாக்குறையை நீக்க எனது தலைமையிலான அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும், எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் நான் இந்த மாமன்றத்தில் பல முறை விரிவாக எடுத்துரைத்து இருக்கிறேன். இந்த ஆண்டு இறுதிக்குள் மின் பற்றாக்குறை போக்கப்படும் என்றும் நான் தெரிவித்து இருந்தேன்.

600 மெகாவாட் திறன் கொண்ட மேட்டூர் அனல் மின் திட்டப் பணிகளைப் பொறுத்த வரையில், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலமான ஐந்து ஆண்டு காலத்தில் 55 விழுக்காடு பணிகளே முடிக்கப்பட்டிருந்தது. நான் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் இந்தத் திட்டத்தினை விரைவுபடுத்தியதன் காரணமாக, தற்போது இந்தத் திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு, இதிலிருந்து தற்போது நமக்கு தொடர்ந்து 500 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது.

வட சென்னை அனல் மின் நிலையத் திட்டத்தின் நிலை 2–ன் முதல் அலகை எடுத்துக் கொண்டால், 50 விழுக்காட்டிற்கும் குறைவான பணிகளே முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டன. நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, இந்தத் திட்டத்தின் பணிகள் முடுக்கி விடப்பட்டதன் காரணமாக, தற்போது இந்தத் திட்டத்திலிருந்து நமக்கு 300 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது. வரும் டிசம்பர் மாதம் முதல் 600 மெகாவாட் மின்சாரம் இதிலிருந்து நமக்கு கிடைக்கும்.

600 மெகாவாட் திறன் கொண்ட வடசென்னை அனல் மின் நிலையம் நிலை 2–ன் இரண்டாவது அலகுப் பணிகள் 40 விழுக்காடு மட்டுமே முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் முடிக்கப்பட்டு இருந்தன. நான் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மீதமுள்ள 60 விழுக்காடு பணிகள் முடிக்கப்பட்டு தற்போது சோதனை ஓட்டம் செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து 350 முதல் 450 மெகாவாட் மின் உற்பத்தி நமக்கு கிடைக்கிறது. நவம்பர் மாத இறுதியிலிருந்து இந்தத் திட்டத்தின் மூலம் 600 மெகாவாட் மின்சாரம் நமக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் தேசிய அனல் மின் கழகத்துடன் கூட்டு முயற்சியில் ஏற்படுத்தப்பட்ட வட சென்னை வல்லூரில் அமைந்துள்ள, 3X500 மெகாவாட் திறன் கொண்ட திட்டப்பணிகள் முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில ஆமை வேகத்தில் சென்று கொண்டிருந்தன. இந்தப் பணிகளை நாங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு துரிதப்படுத்தியதன் காரணமாக, தற்போது இரண்டு அலகுகள் வணிக ரீதியாக மின் உற்பத்தியை முறையே 29.11.2012 அன்றும், 25.08.2013 அன்றும் துவங்கியுள்ளன. மூன்றாவது அலகு அடுத்த ஆண்டு மே மாதம் முதல் உற்பத்தியைத் தொடங்கும்.

மேற்கண்ட புதிய அனல் மின் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உற்பத்தியைத் தொடங்கியுள்ளதால் தற்போது கூடுதலாக 1700 மெகாவாட் மின்சாரம் நமக்கு கிடைத்து வருகிறது.

தமிழ்நாடு மின்சார வாரியமும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமும் இணைந்து தூத்துக்குடியில் அமைத்து வரும் 2X500 மெகாவாட் அனல் மின் திட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்திற்காக வ.உ.சி. துறைமுகத்திடமிருந்து பெறப்பட்டுள்ள நிலம் 'காடுகள்' என வருவாய்த் துறை ஆவணங்களில் வகைப்படுத்தப்பட்டுள்ளதால் அதனை மறுவகைப்படுத்த உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது இதற்கு என்ன அர்த்தம் என்று புரிந்து கொள்ளவேண்டும். நியாயமாக, மக்களுக்குப் பயனளிக்கக்கூடிய ஒரு மின்சாரத் திட்டத்திற்கு நிலத்தை வகைப்படுத்திக் கொடுங்கள், அனுமதி கொடுங்கள் என்று மத்திய அரசைக் கேட்டால், தற்போது காங்கிரஸ் தலைமையில் செயல்படும் மத்திய அரசு, அனுமதியைத் தரவில்லை. அதனால்தான், உச்ச நீதிமன்றத்தில் வழக்கைத் தொடுத்துள்ளோம் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அனுமதியை பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் வரும் ஆண்டு மே மாதம் முதல் மின் உற்பத்தியைத் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இது தவிர மத்திய கால அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு 500 மெகாவாட் மின்சாரம் இந்த ஆண்டு ஜுன் மாதம் முதல் பிற மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு பெறப்பட்டு வருகின்றது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, நீண்டகால அடிப்படையில் 15 ஆண்டுகள் பெறத்தக்க வகையில் 1000 மெகாவாட்+20சதவீதம் பெற வேண்டி விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதில் மொத்தம் 3430 மெகாவாட் அளவிற்கு ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்டன. இதில் 1208 மெகாவாட் பெறுவதற்குரிய ஒப்பந்தங்கள்

4 உற்பத்தியாளர்களுடன் ஆகஸ்டு மாதத்தில் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த ஒப்பந்த புள்ளியிலிருந்தே கூடுதலாக 2122 மெகா வாட் மின்சாரம் பெற அனுமதி கோரி தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் மனு தாக்கல் செய்யப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த அரசு எடுத்த இந்த சீரிய முயற்சியால் மொத்தம்

3330 மெகாவாட் மின்சாரம் 15 ஆண்டுகளுக்கு கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெருமளவு மின்சாரம் சட்டீஸ்கர், ஒடிசா மாநிலங்களிலிருந்து பெறப்படும்.

பிற மாநிலங்களிலிருந்து வாங்கப்படும் மின்சாரத்தை எடுத்து வரத் தக்க மின் வழித் தடங்கள் இல்லாதது குறித்து நான் இந்த அவையிலே பல முறை பேசியிருக்கிறேன். இதனையடுத்து, தற்போது மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரிலிருந்து கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் வரை 765 கிலோ வோல்ட் திறன் கொண்ட மின் வழித்தடங்கள், அமைக்கப்பட்டு வருகின்றன. இது வரும் 2014 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மின் வழித் தடமும் இதனைச் சார்ந்த துணை மின் வழித் தடங்களும் இயக்கி வைக்கப்படும் போது, நாம் கொள்முதல் செய்துள்ள மின்சாரத்தை முழுமையாகப் பெற முடியும்.

இந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழை சிறப்பாக பெய்த காரணத்தால் நீர்மின் உற்பத்தி நிலையங்களைச் சார்ந்த நீர்த் தேக்கங்கள் ஏறத்தாழ முழு கொள்ளளவு நிலையை எட்டியுள்ளன. வருகின்ற வட கிழக்கு பருவ மழையும் நன்றாகவே அமையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தக் காரணங்களாலும் தமிழ்நாட்டின் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்தில் 180 மில்லியன் யூனிட்டுகளாக இருந்து வந்த தினசரி மின் வினியோகம், இந்த ஆண்டு அதிகபட்சமாக 270 மில்லியன் யூனிட்டுகளை எட்டியுள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் முதல் நாள் அன்று இதுவரை இல்லாத உச்ச தேவையான 12,118 மெகாவாட் மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் நிறைவு செய்தது என்பதை இந்தத் தருணத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு 15.6.2013 முதல் தினசரி 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நிகழும் மின்வெட்டு படிப்படியாக தளர்த்தப்படும் என்று நான் ஏற்கெனவே அறிவித்திருந்ததற்கு ஏற்ப, 1.10.2013 முதல் உயரழுத்த தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்வெட்டு, உச்சத் தேவையான மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையுள்ள நேரம் நீங்கலாக, இதர நேரங்களில் 40 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.

வீட்டு உபயோகத்திற்கான மின்வெட்டு சென்னையில் இரண்டு மணி நேரம் என்றும், இதர பகுதிகளில் மூன்று மணி நேரம் என்றும் இருந்தாலும், பெரும்பாலான நாட்களில் மின்வெட்டே இல்லை என்பது தான் யதார்த்த நிலை. அதாவது, முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு என்றிருந்த நிலை மாறி, தற்போது அறிவிக்கப்பட்ட மின்வெட்டும் நடைமுறைப்படுத்தாத நிலை ஏற்பட்டுள்ளது.

தி.மு.க. ஆட்சிக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கும் உள்ள மிகப்பெரிய வேறுபாடு இதுதான். தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மக்களை ஏமாற்றிக் கொண்டே இருந்தார்கள். மின்வெட்டு என்று அறிவிக்கவே இல்லை. ஆனால் மின்வெட்டு இருந்தது. அது நாளாக ஆக, அதிகரித்துக் கொண்டே போனதால் மறைக்க முடியவில்லை. எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. எங்களைப் பொறுத்த வரையில், மோசமான நிலையை சீர்செய்து இருக்கிறோம். இப்போது ஒரு எச்சரிக்கை உணர்வுடன், நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வாக்குறுதி கொடுத்துவிட்டு தவறிவிடக்கூடாது என்பதற்காக, மின்வெட்டு இருக்கும் என்று சொல்கிறோம். ஆனால் மின்வெட்டே இல்லாமல் மின்சாரத்தை கொடுத்துக் கொண்டு இருக்கிறோம்.

நான் ஏற்கெனவே அறிவித்ததற்கேற்ப, தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு விரைவில் முழுமையாக நீங்கி, தங்கு தடையின்றி அனைத்து தரப்பு நுகர்வோர்களுக்கும் மின்சாரம் கிடைக்கப் பெறும்.

தமிழகத்தின் எதிர்கால மின் தேவையைக் கருத்தில் கொண்டு, பல்வேறு புதிய மின் திட்டங்களை நான் இந்த மாமன்றத்தில் அறிவித்து இருந்தேன். அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இந்த மாமன்றத்திலே நான் சுட்டிக் காட்ட விழைகிறேன்.

4000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவிருக்கும் 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் திட்ட விரிவாக்க அலகிற்கான ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்டு ஆய்வுகள் இறுதி நிலையில் உள்ளன. விரைவில் இத்திட்டம் அமைப்பதற்கான ஆணைகள் வழங்கப்பட்டு பணிகள் துவங்கும்.

2X660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டல அனல் மின் திட்டம் 8000 கோடி ரூபாயில் அமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்டு ஆய்வில் உள்ளன. இதற்கான ஆணைகளும் விரைவில் வழங்கப்படும்.

இதே போன்று 2X660 மெகாவாட் திறன் கொண்ட உடன்குடி அனல் மின் திட்டமும், நிலக்கரி இறக்கு தளத்துடன் 9000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டு பரிசீலனையில் உள்ளன. இவையும் விரைவில் இறுதி செய்யப்பட்டு, ஆணைகள் வழங்கி, பணிகள் துவக்க ஆவன செய்யப்படும்.

மேலும் 2X800 மெகாவாட் திறன் கொண்ட இராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் புதிய அனல் மின் திட்டத்திற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்ற சட்டமன்றத் தொடரில் நீலகிரி மாவட்டத்தில் 7000 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2000 மெகாவாட் திறன் கொண்ட 'சில்லஹல்லா நீரேற்று புனல் மின் திட்டம்' உருவாக்கப்படும் என நான் அறிவித்து இருந்தேன். இதற்கான ஆய்வுப் பணிகள் 22.8.2013 அன்று தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

இது மட்டுமல்லாமல், உற்பத்தி செய்யப்படுகின்ற மின்சாரத்தைக் கொண்டு சென்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகிக்கத் தக்க வகையில் பல புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் மின் வழித் தடங்கள் அமைக்கப்படும் என்றும் நான் அறிவித்திருந்தேன்.

5000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3572 கோடி ரூபாய் ஜப்பானிய நிதியுதவியுடன் தமிழ்நாட்டின் குறிப்பாக சென்னையின் கட்டமைப்பையும், தொடரமைப்பையும் வலுப்படுத்த ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி ஐந்து 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களும், பதினான்கு 230 கிலோ வோல்ட் துணைமின் நிலையங்களும் அவற்றைச் சார்ந்த மின் தட வழிகளும் அமைக்கப்பட வேண்டும். இவற்றில் ஐந்து 230 கிலோ வோல்ட் துணைமின் நிலையங்களுக்கான ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டு விட்டன. இரண்டு 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களுக்கும், ஏழு 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களுக்குமான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. மீதமுள்ள மூன்று 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களுக்கும், இரண்டு 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களுக்கும் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படவுள்ளன.

இதே போன்று, 8000 கோடி ரூபாய் செலவில் 56 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என நான் அறிவித்திருந்தேன். இவற்றுள் 5 துணை மின் நிலையங்கள் சோதனை மின்னோட்டம் செய்யப்பட்டுள்ளன. 24 துணை மின் நிலையங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 7 துணை மின் நிலையங்களில் பணிகள் துவங்கப்பட உள்ளன. 13 துணை மின் நிலையங்களுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் ஆய்வில் உள்ளன.

7 துணை மின் நிலையங்களுக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படவுள்ளன.

மேலும் பிற மாநிலங்களிலிருந்து மின்சாரம் பெறத்தக்க வகையில் வேலூர் மாவட்டம் திருவலத்தில் 400 கிலோ வோல்ட் துணைமின் நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் மற்றும் அதனைச் சார்ந்த 400 கிலோ வோல்ட் மின் வழித் தடங்களுக்குமான ஒப்பந்தப் புள்ளிகள் இறுதி செய்யப்பட்டு, பணி ஆணைகள் வழங்கப்பட்டு, பணிகள் துவங்கியுள்ளன.

மரபு சாரா எரிசக்தி ஆதாரங்களை மையமாகக் கொண்டு மின்னுற்பத்தியை பெருக்கிட வேண்டும் என்ற நோக்கத்தில் 'சூரிய எரிசக்தி கொள்கை 2012'ஐ நான் வெளியிட்டிருந்தேன். இதன்படி மூன்று ஆண்டுகளில் சூரிய சக்தி மூலம் 3000 மெகாவாட் அளவிற்கு மின்னுற்பத்தி செய்யப்பட வேண்டும். இதனடிப்படையில் முதல் கட்டமாக 1000 மெகாவாட் அளவிற்கான சூரிய சக்தி மின்னுற்பத்தித் திட்டங்களை நிறுவி அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைக் கொள்முதல் செய்யும் வகையில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, 698 மெகாவாட் அளவிற்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்"" என்ற பழமொழிக்கேற்ப, நமக்கெல்லாம் மின் உற்பத்தியை, மின் விநியோகத்தை அளித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாடு மின் வாரியத்தின் நிதி நிலைமையைச் சீர்படுத்துவதற்காக எனது தலைமையிலான அரசு பெரு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

31.3.2011 நிலவரப்படி தமிழ்நாடு மின்வாரியத்தின் மொத்த இழப்பு சுமார் 40,375 கோடி ரூபாயாகும். இந்த இழப்பை ஈடு செய்து தமிழ்நாடு மின்வாரியத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரும் வகையில் நிதி சீரமைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதன்படி, தமிழ்நாடு மின் வாரியத்தின் குறுகிய கால கடன் சுமையில் 50 சதவீதத்தை அரசே ஏற்றுக் கொள்ளும்.

இந்த சீரமைப்புத் திட்டத்தின்படி 6353.49 கோடி ரூபாய்க்கான மின் வாரியத்தின் நிலுவைக் கடன் தொகைக்கு ஈடான நிதிப் பத்திரங்கள் வங்கிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன. இதன் மீதான அசல் மற்றும் வட்டியினை தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும். மேலும் 5,951.43 கோடி ரூபாய் வங்கிக் கடனை மறு சீரமைப்பு செய்வதற்காக அரசு உத்தரவாதம் வழங்கியுள்ளது. இது தவிர, தமிழ்நாடு மின் வாரியம் கடன் பெற ஏதுவாக 22,700 கோடி ரூபாய் அளவிற்கு அரசு உத்தரவாதத்தை அளித்துள்ளது.

எனது தலைமையிலான தமிழக அரசு கடந்த 2011–2012 ஆம் ஆண்டில் 7,913.35 கோடி ரூபாயும், 2012–2013 ஆம் ஆண்டில் 11,242 கோடி ரூபாயும் நிதியுதவியாக வழங்கியுள்ளது. 20132014 ஆம் ஆண்டிற்கு இதுவரை இருந்திராத அளவாக 12,197 கோடி ரூபாயை நிதியுதவியாக தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் மானியத் தொகை 4,749.90 கோடி ரூபாயை அரசு முன்னதாகவே வழங்கியுள்ளது. மேலும் பங்கு மூலதனமாக 500 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.

அதாவது, தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மின்சாரத் துறையையே பாழ்படுத்தி, சீர்குலைத்து, அது திவாலாகும் அளவிற்கு, இழுத்து மூடவேண்டிய அளவிற்கு ஆக்கிவிட்டு, 45,000 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட கடனையும் வைத்து விட்டுச் சென்றார்கள். இப்பொழுதுதான் நான் அந்தத் தொகையை சொன்னேன். 40,375 கோடி ரூபாய் கடன் வைத்துவிட்டுச் சென்றார்கள். நாங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, இருந்த நிலைமையை நீங்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தக் கடனை எப்படி திருப்பி செலுத்த முடியும்? தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிலைமையை எப்படி மீண்டும் சீர்படுத்த முடியும்? என்று மலைத்துவிட்டார்கள், திகைத்துவிட்டார்கள். நானும் மிகவும் கவலை கொண்டேன். அன்றைய நிலைமையில் ரிசர்வ் வங்கி, ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா, இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவு போட்டுவிட்டது, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கடன் கொடுக்கக்கூடாது என்று. அவர்கள் முடிவே கட்டிவிட்டார்கள்.

தமிழ்நாடு மின்சார வாரியம் இனி தேறவே தேறாது என்று சொல்லி கடன்கூட கொடுக்கக்கூடாது என்று உத்தரவு போட்டார்கள். ஆனால், அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு இன்றைக்கு படிப்படியாக இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு கிட்டத்தட்ட அந்தக் கடன் முழுவதையும் அடைக்கும் அளவிற்கு, தமிழக அரசே பொறுப்பேற்றுக்கொண்டு, அந்தப் பணத்தை மின்சார வாரியத்திற்கு வழங்கி, இன்று மின்சார வாரியத்தை பழைய நிலைமைக்கு கொண்டு வந்து இருக்கிறோம். ஆகவே, மாண்புமிகு உறுப்பினர்கள் எந்தவகையிலும் கவலைகொள்ளத் தேவையில்லை. வெகு விரைவில், மிக விரைவில் தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக ஆக்கப்படும் என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதை சாதித்தே தீருவோம். இதையே கடந்த ஆண்டு சாதித்தே தீருவோம் என்று நான் பேசியபோது, எப்படி செய்யப் போகிறார்கள் என்று எல்லோரும் நகைத்தார்கள். இப்போது சாதித்தே தீருவோம் என்றால் எல்லோரும் நம்புகிறார்கள் என்றால் கிட்டத்தட்ட 99 சதவிகிதம் சாதித்து விட்டோம். இன்னும் ஒரு சதவிகிதம்தான். இந்த ஆண்டு இறுதிக்குள் அதையும் சாதித்துவிடுவோம். ஆகவே நான் எடுத்துள்ள இந்த நடவடிக்கைகள் நமக்குத் தேவையான மின்சாரம் விரைந்து கிடைக்கவும், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிதி நிலைமை மேம்படவும் வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு, உறுப்பினர்கள் பாலபாரதி, ஆறுமுகம் அவர்களும், மற்ற உறுப்பினர்களும் சிறு, குறு தொழிலாளர்களின் நிலைமை என்னவாகும், சிறு, குறு தொழில்கள் நடத்துவோரின் நிலைமை என்னவாகும் என்று கவலை கொள்ளத் தேவையில்லை. எல்லோருக்கும் 24 மணி நேரமும் சீரான மின்சாரம் கிடைக்கும்படியான ஒரு சூழ்நிலையை வெகு விரைவில் உருவாக்கிக் காட்டுவோம் என்று தெரிவித்துக் கொண்டு அமர்கிறேன்.

உறுப்பினர் பாலபாரதி பேசும்போது, சிறு, குறு தொழில்களுக்கு மின்வெட்டு இருப்பதாகக் குறிப்பிட்டார். ஆனால், சிறு, குறு தொழில்களுக்கு மின்வெட்டு கிடையாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயர் மின் அழுத்த பெரிய தொழிற்சாலைகளுக்கு இருந்த 40 விழுக்காடு மின்வெட்டும் 1.10.2013லிருந்து 20 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உறுப்பினர் ஆறுமுகம் பேசும்போது, விவசாயத்திற்கு அளிக்கப்படும் மின்சாரம் குறித்து குறிப்பிட்டார். டெல்டா மாவட்டங்களில் 12 மணி நேர மும்முனை மின்சாரம் அளிக்கப்படுவதுடன், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் சராசரியாக 9 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.

இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.

...

shared via

No comments:

Post a Comment

Popular Posts