Thursday, October 24, 2013

ஜெயலலிதா தீர்மானத்துக்கு அனைத்து கட்சிகள் ஆதரவு jayalalitha decision all party support

ஜெயலலிதா தீர்மானத்துக்கு அனைத்து கட்சிகள் ஆதரவு jayalalitha decision all party support

சென்னை, அக். 24–

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சட்ட சபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா முன்மொழிந்த அரசினர் தீர்மானத்தை அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஆதரித்து வரவேற்று பேசினார்கள். அதன் விவரம் வருமாறு:–

சபாநாயகர் தனபால்:– உலக தமிழர்கள் எங்கு இருந்தாலும் அவர்கள் படும் துன்பத்தை தனது துன்பமாக கருதுபவர் முதல்–அமைச்சர் அம்மா அவர் கொண்டு வந்த இந்த தீர்மானம் வரலாற்று சிறப்பு மிக்கது. தமிழர் இனம் உயர அல்லும், பகலும் அவர் அயராது பாடுபட்டு வருகிறார்.

இந்த தீர்மானத்தை கொண்டு வந்த முதல்– அமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மு.க.ஸ்டாலின் (தி.மு.க.):– முதல்–அமைச்சரால் கொண்டு வரப்பட்ட அரசினர் தீர்மானத்தை தி.மு.க. சார்பில் வழிமொழிந்து வரவேற்க கடமைப்பட்டுள்ளேன்.

காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெறப் போகிறது என்ற செய்தி வந்ததில் இருந்து அந்த மாநாடு இலங்கையில் நடைபெறக் கூடாது என்றும் அதில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி பலமுறை குரல் கொடுத்துள்ளார்.

25–3–13 அன்று நடந்த தி.மு.க. செயற்குழுவிலும், 16–7–13 அன்று நடந்த டெசோ கூட்டத்திலும் இது பற்றி விரிவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தலைவர் கலைஞர், பிரதமர் மன்மோகன்சிங்குக்கு விரிவான கடிதமும் எழுதியுள்ளார்.

தி.மு.க. மட்டுமல்ல பல்வேறு கட்சிகளும் தமிழ் உணர்வு ஆர்வலர்களும் மட்டுமின்றி முதல்–அமைச்சரும் 17–10–13 அன்றும், 25–3–13 அன்றும் இதுபற்றி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கனடா நாட்டின் அகில உலக தமிழர்களும் மாநாட்டை புறக்கணித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் முன்னாள் அதிபரே கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இங்கிலாந்து எம்.பி.க்களும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

தமிழக அளவில் அனைவருமே இதில் ஒன்றுபட்டு குரல் கொடுப்பது ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது. இதற்கு பிறகும் தமிழர்களின் உணர்வுகளை மதிக்காமல் இலங்கையுடனான உறவை இந்தியா கைவிடாமல் இருந்தால் காமன்வெல்த் நாடுகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ராஜபக்சே அவைத் தலைவராக வந்து விடும் நிலை ஏற்பட்டு விடும்.

எனவே ராஜபக்சே நீதி விசாரணைக்கு உட்படாமல் தப்பிக்கும் இக்கட்டான சூழ்நிலை உருவாகி விடும். இதை கருத்தில் கொண்டாவது இந்தியா காமன் வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும். உலக தமிழர்கள் ஒன்று சேர்ந்து வலியுறுத்தும் இந்த கருத்துக்கு ஆதரவாக இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று சொல்லி முதல்– அமைச்சரின் தீர்மானத்தை வரவேற்கிறேன்.

பண்ருட்டி ராமச்சந்திரன் (தே.மு.தி.க.):– இந்த சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்கும் போதே இந்த தீர்மானம் வரும் எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால் சட்டமன்ற அலுவல்கள் தொடங்கிய முதல் நாளே இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவது உலக தமிழர் மனதை பால்வார்த்தது போல் இருக்கிறது.

மத்திய அரசு இலங்கை குறித்து ஒரு தெளிவான முடிவை எடுக்க வேண்டும். இலங்கையை கண்டு எந்த விதத்திலும் பயப்படக்கூடாது. இலங்கை தமிழர்களுக்கு அந்த நாட்டு அரசு எந்த உரிமையும் அளிக்கவில்லை. மனித உரிமை மீறல், இனப்படுகொலை, போர்க்குற்றம் புரிந்த இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்த மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்.

கோபிநாத் (காங்):– மத்திய அரசு இலங்கையில் வாழுகிற தமிழர்கள் மீது அக்கறை கொண்டுள்ளது. இலங்கை பிரச்சினையில் நாங்கள் ராஜீவ்காந்தியை இழந்து விட்டோம். அங்குள்ள தமிழ் மக்களுக்காக மத்திய அரசு இன்று வரை ரூ. 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து வசதிகளை செய்து கொடுத்துள்ளது. நமது பணம் அங்கு சரியாக செல்வழிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க குழு அமைத்து மத்திய அரசு பார்வையிடுகிறது. இன்று தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானத்தை தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவரான நானும் எங்களது உறுப்பினர்களும் ஆதரிக்கிறோம். வரவேற்கிறோம். எங்களுக்குள்ள ஆதங்கம் இலங்கையுடன் இந்தியாவின் உறவு முறிந்தால் அங்கு வாழும் தமிழர்களுக்கு உதவி செய்ய முடியாமல் போகுமோ என்ற பயம் உள்ளது.

இதே போல் பக்கத்து நாடுகளால் பாதுகாப்பு அச்சமும் உள்ளது என்பதையும் சொல்லி இந்த தீர்மானத்தை ஆதரிக்கிறோம்.

ஆறுமுகம் (இந்திய கம்யூ), சவுந்தரராஜன் (மார்க்சிஸ்டு கம்யூ), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி), பி.வி.கதிரவன் (பார்வர்டு பிளாக்), தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி) ஆகியோரும் தீர்மானத்தை வரவேற்று பேசினார்கள்.

...

shared via

No comments:

Post a Comment

Popular Posts